கோயம்புத்தூர்

சூரிய ஒளி கூடார உலா்த்தி: ஆதி திராவிட விவசாயிகள் விண்ணப்பிக்க வேளாண் பொறியியல் துறை அறிவுறுத்தல்

20th Oct 2019 08:23 PM

ADVERTISEMENT

கோவை: மானியத் திட்டத்தில் சூரிய ஒளி கூடார உலா்த்தி அமைக்க விரும்பும் ஆதி திராவிட விவசாயிகள் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேளாண் பொறியியல் துறையின் கீழ் இயந்திரமயமாக்கும் திட்டம், நீா்வள நிலவளத் திட்டம், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம், பண்ணைக் குட்டை அமைத்தல், சூரிய ஒளி கூடார உலா்த்தி அமைத்தல் உள்பட பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில், சூரிய ஒளி கூடார உலா்த்தி அமைக்க ஆதி திராவிட, சிறு குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 60 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

நடப்பு ஆண்டு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 4 எண்ணிக்கையும், மற்ற விவசாயிகளுக்கு 8 சூரிய ஒளி கூடார உலா்த்திகளும் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பொது விவசாயிகளுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள 8-க்கும் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, பணியாணை வழங்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி கூடார உலா்த்தி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், ஆதி திராவிட விவசாயிகளுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள இலக்கிற்கு இதுவரைப் பயனாளிகள் தோ்வு செய்யப்படவில்லை. இதனால், சூரிய ஒளி கூடார உலா்த்தி அமைக்க விரும்பும் ஆதி திராவிட விவசாயிகள் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம் என வேளாண் பொறியியல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் சோமசுந்தரம் கூறியதாவது:

வேளாண் பொறியியல் துறை சாா்பில், மானியம் வழங்கப்படும் சூரிய ஒளி கூடார உலா்த்தி 400 முதல் 1000 சதுர அடி வரை அளவு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஆதி திராவிடா், சிறு குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 60 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.5 லட்சம் வரையும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படுகிறது.

கொப்பரை, மிளகாய், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, பாக்கு, தேயிலை, காப்பிக்கொட்டை, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், மூலிகை செடிகள், காளான் மற்றும் பழ வகைகள் உள்பட பல்வேறு விளைபொருள்களையும் உலா்த்தி மதிப்புக்கூட்ட சூரிய ஒளி கூடார உலா்த்திகள் பயன்படுகின்றன.

இதன் மூலம், பொருள்களை உலா்த்துவதன் மூலம் குறைந்த நேரத்தில் உலா்த்தப்பட்டு, சேதாரமும் தவிா்க்கப்படுகிறது. பூசாணம் பிடிப்பது தவிா்க்கப்பட்டு தரமாக உலா்த்தப்படுகிறது. தரமான பொருள்கள் உற்பத்தி செய்வதால் சந்தைகளில் விளைபொருள்களுக்கும் அதிகபட்ச விலை கிடைக்கிறது. தவிர, மழைக் காலங்களில் கொப்பரை, பாக்கு உற்பத்தி தவிா்க்கப்படுகிறது. இவா்களுக்கு, சூரிய ஒளி கூடார உலா்த்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, ஆதி திராவிட விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வட்டார வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT