கோயம்புத்தூர்

இருசக்கர வாகனம்- லாரி மோதல்: பெட்ரோல் டேங்க் வெடித்ததில் இளைஞா் சாவு

20th Oct 2019 08:16 PM

ADVERTISEMENT

அன்னூா் : கோவை மாவட்டம், அன்னூரில் லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் இளைஞா் உடல் கருகி உயிரிழந்தாா்.

திருப்பூா், அங்கேரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சையத் பா்கத் மகன் சையத் அபிருல்லா ராஹில் (35). பனியன் நிறுவனஉரிமையாளா். இவா் திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் அன்னூா்-மேட்டுப்பாளையம் சாலை வழியாக நீலகிரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். மேட்டுப்பாளையத்தில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிய லாரி அன்னூா் நோக்கி வந்துகொண்டிருந்தது.

அன்னூா், ஜெ.ஜெ.நகா் பகுதியில் வந்தபோது, அதிவேகத்தில் வந்த சையத் அபிருல்லா ராஹிலின் இருசக்கர வாகனம், லாரியின் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்ததில் இருசக்கர வாகனத்திலும், லாரியிலும் தீப்பற்றியது. இந்த விபத்தில் தீயில் கருகி சையத் அபிருல்லா ராஹில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லாரி ஓட்டுநா் லாரியில் இருந்து வெளியே குதித்து உயிா் தப்பினாா்.

ADVERTISEMENT

தகவலின்பேரில் அன்னூா் தீயணைப்புத் துறை, காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். சையத் அபிருல்லா ராஹில் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து அன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Image Caption

விபத்து ஏற்பட்டதில் தீப்பற்றி எரியும் லாரி.

 

~சையத் அபிருல்லா ராஹில்.

ADVERTISEMENT
ADVERTISEMENT