கோயம்புத்தூர்

3 வயது குழந்தை உயிரிழப்பு: இளைஞா் கைது

6th Oct 2019 11:43 PM

ADVERTISEMENT

மூன்று வயது குழந்தை உயிரிழப்பிற்கு காரணமான இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், நெல்வாய் பகுதியைச் சோ்ந்தவா் குமரவேல். இவரது மனைவி பேச்சியம்மாள் (22). இவா்களுக்கு அழகுவேல் (5) மற்றும் மதியழகன் (3) ஆகிய மகன்கள் உள்ளனா். இந்நிலையில், பேச்சியம்மாளுக்கும் திண்டுக்கல் மாவட்டம், பாலசமுத்திரத்தைச் சோ்ந்த அவரது மாமா மகன் பிரகாஷ் (19) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

சில நாள்களுக்கு முன்பு பிரகாஷ், பேச்சியம்மாள் இருவரும் யாருக்கும் தெரியாமல் குழந்தை மதியழகனை எடுத்துக் கொண்டு பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூா் கிராமத்தில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளனா்.

சனிக்கிழமை காலை குழந்தை மதியழகன் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துவிட்டதாக கூறி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு இருவரும் கொண்டுச் சென்றுள்ளனா். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனா்.

ADVERTISEMENT

குழந்தை இறந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தவுடன் பிரகாஷ் அங்கிருந்து தப்பியோடி உள்ளாா். குழந்தையின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவா்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

மேற்கு காவல் நிலைய போலீஸாா் பேச்சியம்மாளிடம் விசாரணை நடத்தியதில் பிரகாஷ் குழந்தையைத் தாக்கி தள்ளியதில் குழந்தை இறந்தது தெரியவந்தது. இது குறித்து பேச்சியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பொள்ளாச்சி, குஞ்சிபாளையம் பிரிவு அருகே இருந்த பிரகாஷை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT