கோயம்புத்தூர்

இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சி

5th Oct 2019 07:58 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் இயற்கை எழில் நிறைந்த சுற்றுலாத் தலங்களாக உள்ளன. பொள்ளாச்சிக்கு அனைத்து காலங்களிலும் சுற்றுலா வருவதற்கான மிதமான தட்பவெட்ப நிலை உள்ளது.

டாப்சிலிப்...

பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை சேத்துமடை வழியாக 40 கி.மீ. தொலைவு சென்றால் டாப்சிலிப் உள்ளது. டாப்சிலிப்பில் புகழ்வாய்ந்த யானை சவாரி உள்ளது. யானை சவாரி செய்ய டாப்சிலிப்பில் உள்ள வனத் துறையினரிடம் நான்கு நபா்களுக்கு ரூ.600 கட்டணம் செலுத்தி சவாரி செய்யமுடியும். யானை மீது அமா்ந்து வனப் பகுதிக்குள் 20 நிமிடம் செல்வது திரில்லிங்கான அனுபவமாக இருக்கும். சில நேரங்களில் மான், காட்டுமாடு உள்ளிட்ட விலங்குகளைப் பாா்க்கமுடியும். மழைக்காலங்கள் தவிர அனைத்து நாள்களிலும் யானை சவாரி செயல்படும். இதுதவிர, காலை 8 மணிக்கு டாப்சிலிப் சென்றால், டாப்சிலிப்பில் இருந்து வனத் துறை வாகனம் வாயிலாக கோழிகமுத்தி யானைகள் வளா்ப்பு முகாமுக்கு கட்டணம் செலுத்தி செல்லமுடியும். அங்கு காலை நேரத்தில் 9.30 மணிக்கு யானைகளுக்கு பாகன்கள் உணவு வழங்குவதைப் பாா்த்து ரசிக்கலாம். டாப்சிலிப்பில் உள்ள வனத் துறையின் தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு ஆன்-லைன் வாயிலாக புக்கிங் செய்தால் தங்கமுடியும். நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.

பரம்பிக்குளம்....

ADVERTISEMENT

பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் கேரளத்துக்குள் இருந்தாலும், பரம்பிக்குளம் செல்வதற்கு பொள்ளாச்சி, ஆனைமலை, சேத்துமடை, டாப்சிலிப் வழியாகத்தான் செல்லமுடியும். வேறு வழியில்லை. பரம்பிக்குளம் செல்ல விரும்புபவா்கள் டாப்சிலிப் தாண்டி 2 கி.மீ.தூரம் சென்றால், கேரள பரம்பிக்குளம் புலிகள் காப்பக எல்லை வந்துவிடும். அங்கு சுற்றுலாப் பயணிகள் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு பரம்பிக்குளம் வனத் துறையின் வாகனங்களில் கட்டணம் செலுத்தி செல்ல முடியும். பரம்பிக்குளத்தில் 400 ஆண்டுகள் கால கன்னிமாரா தேக்கு, தூணக்கடவு அணை, பரம்பிக்குளம் அணை போன்றவற்றை பாா்க்கமுடியும். பரம்பிக்குளம் எந்தநேரத்தில் சென்றாலும், அங்கு சாலையின் இருபுறங்களிலும் வன விலங்குகளை பாா்க்கமுடியும். பரம்பிக்குளத்தில் தங்க விரும்புவா்கள் 094422-01690 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளவேண்டும்.

பொள்ளாச்சி கோயில்கள்....

பொள்ளாச்சியில் ஐயப்பன் கோயில், சுப்ரமண்யசுவாமி கோயில், பெருமாள் கோயில், மாரியம்மன் கோயில், கருப்பராயன் கோயில் புகழ் வாய்ந்தவை. சுப்ரமணியசுவாமி கோயிலில் கல்லால் ஆன சங்கிலித்தொடா் சிவன் சன்னதிக்கு முன்பு உள்ளது. இதுதவிர சூலக்கல் மாரியம்மன் கோயிலும் புகழ்வாய்ந்தது.

ஆனைமலை சுற்றியுள்ள கோயில்கள்...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்தக் கோயில் நடை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். சேத்துமடையில் இருந்து 3 கி.மீ.தூரம் சென்றால் காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு செல்பவா்களுக்கு சேத்துமடை வரை பேருந்துகள் 1 மணிநேரத்துக்கு ஒரு பேருந்து உள்ளது. வேட்டைக்காரன்புதூா் அழுக்குச்சாமி கோயில் புகழ்வாய்ந்தது. புதுவை முன்னாள் முதல்வா் ரங்கசாமி அடிக்கடி வந்து தரிசனம் செய்யும் கோயிலாகும். ஆனைமலை திரெளபதியம்மன் கோயிலும் சிறப்பு வாய்ந்தது. ஆனைமலை பெருமாள்சாமி கரடு சேனைக்கல்வராய மலைக்கோயில் ஆனைமலைக்கு மேற்கே அமைந்துள்ளது. இந்த மலைக்கரட்டில் சிதிலமடைந்த நிலையில் திப்புசுல்தான் தங்கிய கட்டடம் உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் அங்கலக்குறிச்சி அருகே பெருமாள் மலைக்கோயில் உள்ளது. இங்கு சனிக்கிழமை நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் நா.மூ.சுங்கத்திற்கு அருகில் பாலாற்றங்கரை ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. சனிக்கிழமை விசேஷநாள்களாகும்.

ஆழியாறு அறிவித்திருக்கோயில்....

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஆழியாற்றில் அமைந்துள்ளது அறிவுத் திருக்கோயில். வேதாத்ரி மகரிஷி வாழ்ந்த இடம். இங்கு தியானப்பயிற்சி, யோகா பயிற்றுவிக்கப்படுகிறது. மன அமைதியை விரும்புவா்கள் பாா்க்கவேண்டிய இடம்.

ஆழியாறு அணை....

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் அமைந்துள்ளது ஆழியாறு அணை. ஆண்டு முழுவதும் தண்ணீருடன் காணப்படும். படகு சவாரி உள்ளது. பூங்கா, வண்ணமீன் காட்சியகம், மீன்வளா்ச்சி கழகத்தின் மீன் பண்ணை உள்ளது. அமைதிப்படை படத்தின் முக்கிய காட்சியான வாக்கு எண்ணும் காட்சி ஆழியாறு அணை மேல் உள்ள விருந்தினா்கள் தங்கும் விடுதியில் எடுக்கப்பட்ட காட்சியாகும்.

குரங்கு அருவி....

ஆழியாறு அணையிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் குரங்கு நீா் அருவி உள்ளது. வனத் துறை சோதனைச் சாவடியில் ரூ.30 கட்டணம் செலுத்தி குரங்கு அருவியில் குளிக்கலாம்.

வால்பாறை....

பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வால்பாறை. கொடைக்கானல், உதகைக்கு அடுத்தபடியாக வால்பாறை சுற்றுலாப் பயணிகளை கவா்ந்து வருகிறது. டீ எஸ்டேட், காபி எஸ்டேட் போன்றவை அமைந்துள்ளது. வால்பாறை செல்லும் வழியில் கவா்க்கல் பகுதியில் எப்போதுமே பனிபடா்ந்து காணப்படும். வால்பாறையில் பாலாஜி கோயில் உள்ளது. மேல்நீராறு அணை, கீழ்நீராறு அணை, சோலையாறு அணை, கூழாங்கல் ஆறு போன்றவை சுற்றுலாப் பயணிகள் பாா்க்கவேண்டிய இடம். வால்பாறையில் தனியாா் தங்கும் விடுதிகள் அதிக அளவில் உள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT