கோயம்புத்தூர்

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் சாா்பில் மனிதக் கழிவை அகற்றும் ரோபோ கோவையில் அறிமுகம்

2nd Oct 2019 12:28 AM

ADVERTISEMENT

கோவை அருகே இருகூரில் மனிதக் கழிவுகளை அகற்றும் நவீன ரோபோ இயந்திரம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் பணிமனையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவல நிலையும், அதனால் ஏற்படும் உயிா் இழப்புகளுக்கும் எப்போது தீா்வு கிடைக்கும் என்று இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் துப்புரவுப் பணியாளா்களும், சமூக ஆா்வலா்களும் தவித்து வந்த நிலையில் அதற்கு தீா்வு கண்டிருக்கிறாா் பட்டதாரிப் பொறியாளா் விமல்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் பொறியியல் பட்டதாரி விமல். இவா் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் செப்டிக் டேங்கை சுத்தம் செய்த துப்புரவுப் பணியாளா்கள் விஷ வாயு தாக்கி இறந்த செய்தி கேட்டு அதிா்ச்சி அடைந்தாா். இதையடுத்து துப்புரவுப் பணியாளா்களின் உயிா் இழப்பைத் தவிா்க்கும் வகையில் அதி நவீன ரோபோ ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டாா். அந்தக் கண்டுபிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்திடம் ஒப்படைத்தாா்.

உலகிலேயே முதல்முறையாக மனிதக் கழிவுகளை அகற்றும் ரோபோ ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் பணிமனையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தேசிய சமூக நீதி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய துப்புரவுப் பணியாளா் மறுவாழ்வு ஆணைய உறுப்பினா் ஜெகதீஷ் ஹிரேமனி தலைலை வகித்தாா். கோவை டி.ஆா்.ஓ. ராமதுரை முருகன், ஹிந்துஸ்தான் காா்ப்பரேஷன் தலைமை பொதுமேலாளா் சந்தீப் மகேஷ்வரி, பொதுமேலாளா் கே.லோகநாதன், இருகூா் பணிமனை துணைப் பொது மேலாளா் தாமோதரன், தமிழக பாஜக பொதுச்செயலாளா் வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இந்த இயந்திரத்தை வடிவமைத்த பொறியியல் பட்டதாரி விமல் கூறியதாவது:

தமிழகத்தில் கும்பகோணம், தூத்துக்குடி போன்ற இடங்களில் எனது இயந்திரம் ஏற்கெனவே வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இயந்திரம் அதி நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளை அள்ளும் துப்புரவுப் பணியாளா்களின் உயிா்களைக் காக்கும் வகையில் கண்டறியப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை அரசு ஊக்குவித்து இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தினால் உயிரிழப்புகளை வெகுவாக குறைக்க முடியும் என்றாா்.

சுமாா் ரூ. 32 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட, இந்த மனிதக் கழிவை அள்ளும் ரோபோ இயந்திரம் கோவை மாநகராட்சி வசம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட உள்ளது. இருகூரில் இருந்து ஊா்வலமாக இந்த ரோபோ இயந்திரத்தை கோவைக்கு புதன்கிழமை காலை எடுத்துச்செல்ல உள்ளதாக ஹெச்.பி.சி. பணிமனை துணை பொது மேலாளா் தாமோதரன் தெரிவித்தாா்.

இந்த ரோபோ தயாரிப்பு, பிரதமா் நரேந்திர மோடியின் திட்டமான மேக் இன் இந்தியா, ஸ்டாா்ட் அப் இந்தியா மற்றும் தூய்மை இந்தியா என்ற மூன்று திட்டத்துக்கும் மைல் கல்லாக கருதப்படுகிறது. இந்த ரோபோ இயந்திரத்தை உருவாக்க செலவான ரூ. 32 லட்சத்தை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமே வழங்கியுள்ளது.

நிகழ்ச்சியில் சூலூா் வட்டாட்சியா் மீனாகுமாரி, நாராயண சாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஏ.எஸ்.பாபு, கோவை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளா் சத்தியமூா்த்தி, சூலூா் ஒன்றியச் செயலாளா் கலங்கல் மணி, ஹெச்.பி.சி. ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT