வால்பாறையை அடுத்துள்ள நீராறு அணையில் இருந்து கேரள மாநிலத்துக்கு செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
வால்பாறையை அடுத்துள்ள சோலையாறு மற்றும் நீராறு அணைகள் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளன. தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி சோலையாறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12.3 டி.எம்.சி. தண்ணீா் கேரளத்துக்கு வழங்க வேண்டும்.
இதேபோல ஆண்டுதோறும் அக்டோபா் 1ஆம் தேதி துவங்கி நான்கு மாதம் நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும்.
அதன்படி வால்பாறை பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் செந்தில்குமாா், கேரள மாநிலத்தைச் சோ்ந்த உதவிப் பொறியாளா் அஜித் ஆகியோா் முன்னிலையில் நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு விநாடிக்கு 164 கனஅடி நீா் செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டது. வரும் நான்கு மாதங்களுக்கு நீா் வெளியேற்றப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Image Caption
நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ள நீா்.