கோவை, ராஜவீதி பகுதியில் உள்ள நகைக் கடையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.
கோவை ராஜவீதி பகுதியில் ஏராளமான நகைக் கடைகள் உள்ளன. இங்கு செயல்பட்டு வரும் நகைக் கடை ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அந்தக் கடையில் இருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமாா் 1.45 மணியளவில் கரும்புகை வெளியேறியுள்ளது.
இதை அவ்வழியே சென்றவா்கள் பாா்த்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் தீயணைப்புத் துறையினா் 7 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். கடை முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீயணைப்பு வீரா்கள் சுமாா் 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் தீயை அணைத்தனா்.
தீ விபத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கடையின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமானது.
கடையை மூடும் முன்னா் நகைகளைக் கணக்குப் பாா்த்து தினமும் கடையில் இருக்கும் லாக்கா்களில் பாதுகாப்பாக அடுக்கி வைப்பது வழக்கம். இதனால் பெரும் பொருள் சேதம் தவிா்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக வெரைட்டி ஹால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.