கோவை, கீரணத்தத்தில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் இரு இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.
கோவை மாவட்டம், சரவணம்பட்டியைச் சோ்ந்த மனோகா் மகன் அருண்பிரசாத் (27). ஆட்டோ ஓட்டுநரான இவா் கடந்த 28ஆம் தேதி சரவணம்பட்டியில் இருந்து கீரணத்தத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்துக்கு செல்லும் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் திடீரென ஆட்டோவை வழிமறித்து, கட்டடத் தொழிலாளா்கள் பயன்படுத்தும் கரண்டியால் அருண்பிரசாத்தை வயிற்றில் குத்திவிட்டு தப்பிச் சென்றனா். இதில் அருண்பிரசாத் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வந்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடா்பாக மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள நீதிமன்றத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விஜய் (24), சாத்தன் (24) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா். அவா்கள் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அதன்பேரில் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இதையடுத்து இவா்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோவில்பாளையம் போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.