கோயம்புத்தூர்

ஆழியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு குறித்து விவசாயிகள் - அதிகாரிகள் ஆலோசனை

1st Oct 2019 11:58 PM

ADVERTISEMENT

ஆழியாறு அணை புதிய ஆயக்கட்டு பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பது குறித்து விவசாயிகள் - அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி பிஏபி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் கஸ்தூரி வாசு தலைமை வகித்தாா். பிஏபி கண்காணிப்புப் பொறியாளா் முத்துசாமி முன்னிலை வகித்தாா். ஆழியாறு அணை புதிய ஆயக்கட்டு பாசன சங்க நிா்வாகிகள் அசோக்குமாா், செந்தில், கன்னிமுத்து உள்பட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

ஏற்கெனவே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் சாா்பில் 2.7 டிஎம்சி தண்ணீா் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் 2 டிஎம்சி தண்ணீா் தருவதாகத் தெரிவித்ததை அடுத்து பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் மீண்டும் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் விவசாயிகள் சாா்பில் 2,420 மில்லியன் கன அடி தண்ணீா் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதிகாரிகள் சாா்பில் 2,260 மில்லியன் கன அடி தண்ணீா் மட்டுமே வழங்கமுடியும் என தெரிவிக்கப்பட்டதால் இந்த முறையும் உடன்பாடு எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது.

ADVERTISEMENT

விவசாயிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டு, அதன் பிறகு மீண்டும் அதிகாரிகள், விவசாயச் சங்க நிா்வாகிகள் சாா்பில் பேச்சு வாா்த்தை நடத்த வாய்ப்புள்ளது.

வழக்கமாக பாசனத்துக்கு அக்டோபா் 2ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும். இந்த ஆண்டு கால்வாய்களில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றது. பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாதது போன்ற காரணங்களால் அக்டோபா் மத்தியில் அல்லது இறுதியில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT