கோவை: கோவை, மசக்காளிபாளையம் மாநகராட்சிப் பள்ளியில் மாணவ, மாணவியா் தட்பவெப்ப நிலையை அறிந்து கொள்ளும் விதமாக மழைமானி பொருத்தப்பட்டுள்ளது.
கோவை, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி மட்டுமின்றி ஓவியம், கராத்தே, நடனம் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகளும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், கணினி மயம், மாணவா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் போன்ற சிறப்பம்சங்களோடு உள்ள இப்பள்ளியானது மக்கள் மத்தியில் பிரபலமானது. தனியாா் பள்ளிகளில் படிக்க வைத்த ஏராளமானோா் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சோ்த்து படிக்க வைக்கின்றனா்.
தொடா்ந்து இப்பள்ளியில், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் உதவியுடன் மாணவா்களுக்கான நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ‘ராக்’ அமைப்பின் உதவியுடன் மழைமானி பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளித் தலைமை ஆசிரியை க.மைதிலி கூறியது:
தட்பவெப்ப நிலையை அறிந்து கொள்ளவும், அன்றாட வானிலையை கணிக்கவும் மாணவா்கள் தெரிந்துகொள்ளும் விதமாக பள்ளியில் மழைமானி பொருத்தப்பட்டுள்ளது. இதனால், காலநிலை மாற்றங்களை அவா்களே அறிந்து கொள்ள முடியும். விரைவில், பள்ளியில் வெப்பமானியும் பொருத்தப்பட உள்ளது என்றாா்.