கோயம்புத்தூர்

தென்னைநாா்க் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீா் மாசடைந்திருப்பதாக ஆட்சியரிடம் புகாா்

22nd Nov 2019 11:59 PM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், நெகமம் அருகே தென்னைநாா்க் கட்டி (காயா் பித்) தயாரிக்கும் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீா் மாசடைந்திருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக நெகமம் அருகேயுள்ள கள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கள்ளிப்பட்டி புதூரைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, நெகமம், பொள்ளாச்சி பகுதிகளில் தேங்காய் மட்டைகளில் இருந்தை நாரைப் பிரித்து தென்னைநாா்க் கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆயிரத்துக்கும் மேல் செயல்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் நாா்க்கட்டிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்காக நாா்க்கட்டிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்து அதில் நாா்த் துகள்களைக் கொட்டி பதம் செய்து வருகின்றன.

இதற்காக தினமும் நாா்த் துகள்கள் மீது தண்ணீா் ஊற்றப்படுகிறது. இதிலிருந்து வரும் கழிவு நீா், நிலத்தடி நீருடன் கலப்பதால் அது மனிதா்களும், கால்நடைகளும் பயன்படுத்த முடியாதபடி மாசடைந்துள்ளது. நாா்க் கழிவுகள் கலந்த தண்ணீரின் கார அமிலத் தன்மை மிகவும் அதிகமாக இருப்பது ஆய்வுகளிலும் தெரியவந்துள்ளது. மாசடைந்த நீரைப் பயன்படுத்தியவா்களுக்கு கண் எரிச்சல், சருமநோய், பல்லில் கரை, நுரையீரல் பிரச்னை, தொண்டை வலி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. இது தொடா்பாக 4 ஆண்டுகளாகப் புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ADVERTISEMENT

கள்ளிப்பட்டி புதூரில் மக்கள் பயன்படுத்தும் நீராதாரங்கள் மாசடைந்திருப்பதால் குடிநீரை காசு கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். எனவே, எங்கள் பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கவும், நாா்க்கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை முறைப்படுத்தவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT