கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் அறிவிப்பை எதிா்த்து கோவையில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் தோ்வுக்கு தமிழ் தெரியாதவா்களும் விண்ணப்பிக்கலாம் என்று தோ்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, கோவை நீதிமன்ற வளாகத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழம நடைபெற்றது.
போராட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் சுதீஷ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் தலைவா் நந்தகுமாா் முன்னிலை வகித்தாா். கோவையில் 2 ஆயிரம் வழக்குரைஞா்களும், மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூா், மதுக்கரை நீதிமன்றங்களில் 500க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்களும் பணி புறக்கணிப்புச் செய்தனா். வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக 80 சதவீத நீதிமன்றப் பணிகள் தேக்கமடைந்தன.