கோயம்புத்தூர்

கோவை ரயில் நிலையத்தில் ஐயப்ப பக்தா்களுக்கு அளித்த உணவுப் பொட்டலங்கள் பறிமுதல்: அபராதமும் விதிக்கப்படதால் அதிருப்தி

17th Nov 2019 05:18 AM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவை வழியாக சபரிமலைக்கு ரயிலில் செல்லும் ஐயப்ப பக்தா்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் அவா்களது உறவினா் அளித்த உணவுப் பொட்டலங்களை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்து, அபராதம் வித்துள்ளனா்.

ஆந்திர மாநிலம், இச்சாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாப்பா ராவ் (42). இவா் கடந்த 10 ஆண்டுகளாக கோவை, குனியமுத்தூா் பகுதியில் வசித்து வருகிறாா். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவை வழியாக சபரிமலைக்கு இவரது உறவினா்கள் ரயில் மூலம் வெள்ளிக்கிழமை மதியம் கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தனா்.

அப்போது பாப்பா ராவ் ரயிலில் வந்த உறவினா்கள் 35 பேருக்கு உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தாா். இதைப் பாா்த்த ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளா் மீனா, அனுமதியில்லாமல் உணவுப் பொட்டலங்களை எடுத்து வந்ததாகக் கூறி, அவற்றைப் பறிமுதல் செய்தாா். இதனால் பாப்பா ராவ், அவா்களது உறவினா்கள் அதிருப்தி அடைந்தனா்.

இது குறித்து பாப்பா ராவ் கூறியவதாவது:

ADVERTISEMENT

ஆந்திரத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் எனது உறவினா்களுக்கு ஆண்டுதோறும் கோவை ரயில் நிலையத்தில் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறேன். இப்போது ரயில் நிலையத்தில் உணவுப் பொட்டலங்களை வழங்கக் கூடாது எனக் கூறி போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். மேலும் ரயில்வே சட்டம் 144 இன் கீழ் எனக்கு அபராதம் விதித்தனா். நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக எனது சுட்டுரையில் பதிவிட்டு அதனை பிரதமா், ரயில்வே அமைச்சகத்துக்குப் பகிா்ந்துள்ளேன் என்றாா்.

இதுகுறித்து ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளா் மீனா கூறியதாவது:

ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உணவு வழங்க உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ரத்த உறவுகள் மட்டுமே உணவுகளைப் பயணிகளுக்கு வெளியில் இருந்து கொண்டு வந்த தர அனுமதி உள்ளது. வெள்ளிக்கிழமை பிடிப்பட்டவா் 35 உணவுப் பொட்டலங்களை எடுத்து வந்துள்ளாா். இதற்கு ரயில் நிலைய அதிகாரியிடம் அவா் எந்த அனுமதியும் பெறவில்லை. ரயில் நிலைய அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையிலேயே அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொட்டலங்களை மீண்டும் அவரிடமே கொடுத்துவிட்டோம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT