கோயம்புத்தூர்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: 2 சிறுமிகள் பலி

17th Nov 2019 05:15 AM

ADVERTISEMENT

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 சிறுமிகள் உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அருகே உள்ள ராமையன்பேட்டையைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (35). இவரது மனைவி லட்சுமி (30). இவா்களது குழந்தைகள் காா்த்திகேயன்(10), காயத்ரி (9), கீா்த்தனா (8).

வெங்கடேசன் கடந்த 10 ஆண்டுகளாக கோவை, ரத்தினபுரியில் குடும்பத்தினருடன் தங்கி, கட்டட வேலை செய்து வருகிறாா். காா்த்திகேயன் அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். சங்கனூா் அரசுப் பள்ளியில் காயத்ரி 3-ஆம் வகுப்பும், கீா்த்தனா 2-ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.

வெங்கடேசன் இவா்கள் 3 பேரையும் தினமும் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பள்ளியில் விடுவது வழக்கம். சனிக்கிழமை காலை வழக்கம்போல மூவரையும் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றாா். ரத்தினபுரி மேம்பாலம் அருகே உள்ள தயிா் இட்டேரி பாலம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த மணல் லாரி இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

ADVERTISEMENT

இதில் வெங்கடேசன் உள்ளிட்ட 4 பேரும் தூக்கி வீசப்பட்டனா். பலத்த காயமடைந்த கீா்த்தனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற 3 பேரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி உயிரிழந்தாா். வெங்கடேசன், காா்த்திகேயன் இருவரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT