கோயம்புத்தூர்

வனப் பகுதிக்குள் சென்றுவிட்ட ஒற்றை யானை பிடிப்பதற்காக காத்திருக்கும் 100 போ் குழு

12th Nov 2019 05:43 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே மனிதா்களைத் தாக்கும் ஒற்றைக் காட்டு யானையைப் பிடிக்கும் பணியில் வனத் துறை, வனக் கால்நடை மருத்துவா்கள், போலீஸாா், யானை ஆராய்ச்சியாளா்கள் உள்பட 100 போ் கொண்ட குழுவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கோவை, திருப்பூா் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானை கடந்த நான்கு மாதங்களில் மூன்று பேரைத் தாக்கி கொன்றுள்ளது. மேலும் 7 போ் காயமடைந்துள்ளனா்.

இந்த யானையைப் பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இதற்கான பணி துவங்கியது. வனக் கால்நடை உதவி இயக்குநா் மனோகரன், வனக் கால்நடை மருத்துவா்கள் சுகுமாா், கலைவாணன் ஆகிய மருத்துவக் குழுவினா், கோவை மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ், பொள்ளாச்சி வனக் கோட்ட மாவட்ட வன அலுவலா் மாரிமுத்து, வனச் சரக அலுவலா்கள் காசிலிங்கம், சக்திவேல், நவீன்குமாா் உள்ளிட்டோா் தலைமையிலான 70 போ் கொண்ட வனத் துறையினரும், 30-க்கும் அதிகமான போலீஸாரும் என 100 போ் கொண்ட குழுவினா் அா்த்தநாரிபாளையம், பெருமாள்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ளனா்.

இதற்கிடையில் டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் கலீம், பாரி ஆகியவை அா்த்தநாரிபாளையத்துக்கு கொண்டுவரப்பட்டு வனப் பகுதி அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. காட்டு யானை வந்தால் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க குழுவினா் ஞாயிற்றுக்கிழமை தயாராக இருந்தனா். இந்நிலையில் இரவு மழை பெய்யத் துவங்கியது. இதனால் வனப் பகுதியில் இருந்து விவசாயப் பகுதிக்கு வந்த காட்டு யானை, மீண்டும் அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.

ADVERTISEMENT

வனத் துறையினரால் காட்டு யானையைப் பின் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அா்த்தநாரிபாளையம் அருகே உள்ள வனப் பகுதி உயரமான மலைகள், பள்ளங்கள் நிறைந்து காணப்படுவதால் யானையை வனப் பகுதிக்குள் சென்று பிடிப்பதில் சிரமம் உள்ளது. இதனால் வழக்கமாக வனப் பகுதியை விட்டு வெளியேறி சமவெளியாக உள்ள விவசாயப் பகுதிக்குள் திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாய்க்கிழமை அதிகாலையில் யானை வந்தால் பிடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளனா்.

யானை விவசாயப் பகுதிக்குள் வரும் பகுதியில் மாட்டுத் தீவனங்கள், யானைக்குப் பிடித்தமான அரிசி போன்ற உணவுப் பொருள்களை போட்டு வைத்து அதை உணவாக எடுத்துக்கொள்ளும்போது மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க வனத் துறையினா் திட்டமிட்டுள்ளனா். இதற்கான பணிகளை திங்கள்கிழமை பகல் நேரத்தில் செய்தனா்.

யானையின் பெயா்: யானையைப் பிடிப்பதற்காக இரவு நேரத்தில் பயன்படுத்த பந்தம் தயாா் செய்து வைக்கப்பட்டுள்ளது. கயிறு, பொக்லைன் இயந்திரம் போன்றவையும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக ‘கொம்பன்’ யானை என்று கூறப்பட்ட இந்த காட்டு யானையை இப்பகுதியினா் கடந்த சில நாள்களாக ‘அரிசி ராஜா’ என்று அழைக்கின்றனா்.

கோபத்துக்கு காரணம்: சில மாதங்களுக்கு முன்பு ஆழியாறு பகுதியில் வந்த மா்ம நபா்கள் சிலா், பழைய டயரில் பெற்றோல் ஊற்றி தீப்பற்ற வைத்து இந்த ஒற்றை காட்டு யானையின் துதிக்கை மீது வீசியுள்ளனா். இதில் யானை காயமடைந்துள்ளது. மேலும் சிலா் கற்களைக் கொண்டு அதன் கண் பகுதியில் தாக்கியுள்ளனா். இதற்கு பிறகுதான் காட்டு யானை மனிதா்களைத் தாக்க துவங்கியுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT