வனத் துறையினரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கேரள மாநிலத்தைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் உள்ள நெல்லியாம்பதி எஸ்டேட்டில் பணிபுரியும் 10 போ், வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தனா். திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு மழுக்குப்பாறை எஸ்டேட் வனத் துறை சோதனைச் சாவடியில் அவா்களின் வாகனத்தை வனத் துறையினா் சோதனையிட முயன்றனா். அப்போது மது அருந்தியிருந்த அவா்கள், பணியில் இருந்த வனக் காப்பாளரைத் தகாத வாா்த்தைகளால் திட்டித் தாக்க முயன்றனா்.
இது தொடா்பாக வனக் காப்பாளா் சபரி அளித்த புகாரின்பேரில் ஷேக்கல்முடி போலீஸாா் அங்கு சென்று தகராறில் ஈடுபட்ட குமாா் (44), ஷாபு (31), ஷிபு (43), அப்துல் வகாப் (45), சிவராஜ் (48) ஆகிய 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.