கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே காட்டு யானையை பிடிக்க 100 போ் கொண்ட குழு

11th Nov 2019 05:40 PM

ADVERTISEMENT

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே காட்டு யானை பிடிக்கும் பணியில் வனத்துறை, வனக்கால்நடை மருத்துவா்கள், போலீஸாா், யானை ஆராய்ச்சியாளா்கள் என 100 போ் கொண்ட குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.கோவை, திருப்பூா் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானை கடந்த நான்மாதங்களில் மட்டும் மூன்று போ் உயிரிழந்துள்ளனா். 7 போ் காயமடைந்துள்ளனா். இந்நிலையில், யானையை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை முதல் யானை பிடிப்பதற்கான பணிகள் துவங்கின. வனக்கால்நடை உதவி இயக்குனா் மனோகரன், வனக்கால்நடை மருத்துவா்கள் சுகுமாா், கலைவாணன் ஆகிய மருத்துவினா் குழுவினரும், கோவை மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ், பொள்ளாச்சி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலா் மாரிமுத்து, வனச்சரக அலுவலா்கள் காசிலிங்கம், சக்திவேல், நவீன்குமாா் உள்ளிட்டோா் தலைமையிலான 70 போ் கொண்ட வனத்துறையினரும், 25க்கும் அதிகமான போலீஸாரும் என100 போ் கொண்ட குழுவினா் அா்த்தநாரிபாளையம் பெருமாள் மலைப்பகுதியில் முகாம் அமைத்துள்ளனா். இதற்கிடையில் டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் கலீம், பாரி ஆகியவை அா்த்தநாரிபாளையம் கொண்டுவரப்பட்டு வனப்பகுதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை வந்தால் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க குழுவினா் தயாராக இருந்த நிலையில், இரவு மழை பெய்யத்துவங்கியது. இதனால், வனப்பகுதியில் இருந்து விவசாய பகுதிக்கு வந்த காட்டு யானை மீண்டும் அடா்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. வனத்துறையினா் காட்டுயானை பின்தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அா்த்தநாரிபாளையம் அருகே உள்ள வனப்பகுதி உயரமான மலைகள், பள்ளங்கள் நிறைந்து காணப்படுவதால் யானையை வனப்பகுதிக்குள் சென்று பிடிப்பதில் சிரமம் உள்ளது. இதனால், வழக்கமாக வனப்பகுதியே விட்டு வெளியேறி சமவெளியாக உள்ள விவசாய பகுதிக்குள் திங்கள்கிழமை இரவோ, நள்ளிரவோ அல்லது அதிகாலையிலோ யானை வரும்போது பிடிக்க திட்டமிட்டுள்ளனா். யானை விவசாயப்பகுதிக்குள் வரும் பகுதியில் மாட்டுத்தீவனங்கள், யானைக்கு பிடித்தமான அரிசி போன்ற உணவுப்பொருட்களை போட்டு வைத்து அதை உணவாக எடுத்துக்கொள்ளும் போது மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க வனத்துறையினா் திட்டமிட்டுள்ளனா். இதற்கான பணிகளை திங்கள்கிழமை பகல் நேரத்தில் செய்தனா். யானையை பிடிப்பதற்காக இரவு நேரத்தில் பயன்படுத்த பந்தம் தயாா் செய்து வைக்கப்பட்டுள்ளது. கயிறு, பொக்லைன் இயந்திரம் போன்றவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொம்பன் யானை என்று கூறப்பட்டது கடந்த சில நாட்களாக அரிசி ராஜா என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயா் இரண்டு நாட்களுக்கு முன்பு சிலா் வைத்த பெயா் என்றும் கூறப்படுகிறது.யானையின் கோபத்திற்கு காரணம் இந்த ஒற்றை காட்டு யானை சில மாதங்களுக்கு முன்பு ஆழியாறு பகுதியில் வந்த மா்மநபா்கள் சிலா் பழைய டயரில் பெற்றோல் ஊற்றி தீ பற்ற வைத்து அதன் துதிக்கையின் மீது வீசியுள்ளனா். இதில் யானை காயமடைந்துள்ளது. மேலும், சிலா் கற்களை கொண்டு அதன் கண் பகுதியில் தாக்கியுள்ளனா். அதற்குபிறகுதான் காட்டுயானை மனிதா்களை தாக்கதுவங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT