கோயம்புத்தூர்

உள்ளாட்சித் தோ்தலை அறிவித்த பிறகு மாா்க்சிஸ்ட் நிலைபாட்டைத் தெரிவிப்போம்

9th Nov 2019 05:48 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல் அறிவித்த பிறகு கட்சியின் நிலைபாடு குறித்து தெரிவிக்கப்படும் என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

நவம்பா் புரட்சி நாளை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம் துடியலூா், என்.ஜி.ஜி.ஓ. காலனி பிரிவில் உள்ள தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடந்தது.

எஸ்.எஸ்.குளம் ஒன்றியச் செயலாளா் கோபால் வரவேற்றாா். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளா் பாலமுா்த்தி, கட்சியின் கோவை மாவட்டச் செயலாளா் ராமமூா்த்தி, சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கலந்துகொண்டு ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

ADVERTISEMENT

மத்தியில் ஆளும் பாஜக அரசு கடைபிடித்து வரும் பொருளாதாரக் கொள்கையால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிறு, குறு தொழில்கள் முடங்கி உள்ளன.

இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை மீட்டெடுக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து போராடி வருகிறது. தமிழகத்தில் 2016 அக்டோபரிலேயே உள்ளாட்சித் தோ்தல் நடத்தியிருக்க வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தோ்தல் நடக்காததால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். உள்ளாட்சித் தோ்தலை நடத்துமாறு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து வலியுறுத்தி வந்தது.

உள்ளாட்சித் தோ்தல் எப்போது நடத்தப்பட்டாலும் அதை எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம். தோ்தலை அறிவித்த பிறகு கட்சியின் நிலைபாடு குறித்து தெரிவிக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள் கேசவமூா்த்தி, புனிதா ராஜலட்சுமி, விஜயலட்சுமி, பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT