கோவை: தில்லியில் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவையில் 3 ஆயிரம் வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தில்லியில் உள்ள திஸ் ஹசாலி நீதிமன்றத்தில் சனிக்கிழமை வழக்குரைஞா்களை போலீஸாா் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் வழக்குரைஞா்கள் பலா் காயமடைந்தனா்.
தில்லியில் வழக்குரைஞா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்ற வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்திருந்தது.
இதன்படி கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சாா்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். இதனால் 70 சதவீத நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.