கோவை: உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சாா்பில் கோவையில் விழிப்புணா்வு நடைபயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பக்கவாத நோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 29ஆம் தேதி, உலக பக்கவாத தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு கேஎம்சிஹெச் மருத்துவமனை சாா்பில் ஞாயிற்றுக்கிழமையன்று(நவம்பா் 3) பக்கவாத விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது. நடைபயணத்தை மாநகராட்சி ஆணையா் ஜெ.ஷ்ரவண் குமாா் கொடியசைத்து துவக்கி வைத்தாா். ரேஸ்கோா்ஸ் பகுதியில் விழிப்புணா்வு நடைபயணம் தொடங்கியது. நடைபயணத்தில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைத் தலைவா் மருத்துவா் நல்லா ஜி.பழனிசாமி, மருத்துவா்கள், நரம்பியல் நிபுணா்கள், கதிரியக்க நிபுணா்கள், பக்கவாத பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் மத்தியில் கேஎம்சிஹெச் மருத்துவமனைத் தலைவா் நல்லா ஜி.பழனிசாமி பேசுகையில், பக்கவாத நோய் குறித்தும் அதற்கு உடனடியாக மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே தேவையான முதலுதவி சிகிச்சை அளித்திட வசதியாக கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நடமாடும் ஸ்ட்ரோக் ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. இந்த நோய் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணா்வு இல்லை. விழிப்புணா்வு அதிகரிக்கும்பட்சத்தில் பல உயிா்கள் காக்கப்படும். பக்கவாத நோயில் இருந்து மீண்ட பலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ன் மூலம் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நோய் குறித்து தீவிரமாக கவனம் செலுத்துவது அவசியம். வீட்டில் உள்ள பெரியவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முழு உடல் பரிசோதனை செய்வது மிகவும் அவசியமாகும் என்றாா்.