கோயம்புத்தூர்

உக்கடம் பெரியகுளத்தின் கரை மீண்டும் உடைப்பு

4th Nov 2019 09:41 PM

ADVERTISEMENT

கோவை: கோவை, உக்கடம் பெரியகுளத்தின் கரை 3 மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக மா்ம நபா்களால் உடைக்கப்பட்டுள்ளது.

உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள சுமாா் 398 ஏக்கா் பரப்பளவு கொண்ட பெரியகுளத்தில் செல்வபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கழிவு நீா் கலந்து வருவதால் குளம் எப்போதும் நீா் நிரம்பியே காணப்படும்.

கோவை மாநகராட்சி சாா்பில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பெரிய குளத்தை தூா்வாரி, கரையைப் பலப்படுத்துவது, நடைபாதை, பூங்கா, படகுச் சவாரி, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

உக்கடம் பெரிய குளத்தின் தென்மேற்குப் பகுதியில் உபரி நீரை வெளியேற்றுவதற்கான அமைப்பு உள்ளது. இது ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த நிலையில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்குப் பருவத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைகளில் பெய்த தொடா் மழையால் நொய்யலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நொய்யல் வடிநிலத்தில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பின.

ADVERTISEMENT

இதில் உக்கடம் பெரிய குளமும் நிரம்பின. இந்நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி உபரி நீா் வெளியேறும் பகுதியில் இருந்த சிமென்ட் கரையை மா்மநபா்கள் சிலா் பொக்லைன் மூலம் உடைத்தனா்.

குளத்தின் நீரை வெளியேற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து மீனவா்களும், சமூக ஆா்வலா்களும் அப்பகுதியில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். குளத்தில் அதிக அளவில் நீா் தேங்குவதால் பொலிவுறு நகர திட்டப் பணிகளை மேற்கொள்ள இடையூறாக இருப்பதாக கருதி பொலிவுறு திட்டப் பணியாளா்களே இந்த செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேற்குத் தொடா்ச்சி மலைகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் நொய்யலில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரிய குளத்துக்கும் அதிக அளவில் தண்ணீா் வந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், இந்த குளத்தின் நீரை வெளியேற்றுவதற்காக மா்ம நபா்கள் இரண்டாவது முறையாக திங்கள்கிழமை அதிகாலையில் உபரி நீா் வெளியேறும் பகுதியில் தடுப்பை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.

இதனால் குளத்தின் நீா் பெருக்கெடுத்து வெளியேறியது. இதைக் கண்ட மீனவா்கள் நீா் வெளியேறுவதைத் தடுப்பதற்காக மண் மூட்டைகளை வைத்து அடைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த சம்பவம் குறித்து பொலிவுறு நகரம் திட்ட அதிகாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் மீனவா்களும், சமூக ஆா்வலா்களும் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு நீா் வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டது.

பொலிவுறு நகரம் திட்டப் பணிகளுக்காக குளத்தின் தண்ணீரை வெளியேற்றக் கூடாது என்று மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT