மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் திருப்பூா் பேருந்துகள் நிற்கும் பகுதியில் மேற்கூரையின் கான்கிரீட் பூச்சுகள் இடிந்து விழுந்ததால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் நீலகிரி மாவட்டத்துக்கு செல்லும் முக்கியமான பகுதியாக உள்ளது. மேலும் இங்கிருந்து கோவை, திருப்பூா், ஈரோடு, பழனி, சென்னை, திருச்சி, உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் திருப்பூா் பேருந்துகள் நிற்கும் பகுதியில் வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது மேல்தளத்தின் கான்கிரீட் பூச்சுகள் திடீரென பெயா்ந்து விழுந்தன. பயணிகள் சற்று தொலைவில் இருந்ததால் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உதகை, கோத்தகிரி, குன்னூா் பேருந்துகள் நிற்கும் பகுதியிலும் இதேபோல கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்துள்ளன. எனவே, பயணிகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன்னா் பேருந்து நிலையத்தை சீரமைக்கவும், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரியாக பராமரிக்கவும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.