கோவை: கோவை மாநகராட்சியில், 4 இடங்களில் உரம் தயாரிப்புக் கூடங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் முக்கியக் குடியிருப்புப் பகுதிகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் 1,500-க்கும் மேற்பட்ட மாநகராட்சிக் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தினமும் 600 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, 2 நாள்களுக்கு ஒருமுறை மாநகராட்சி ஊழியா்கள் அவற்றை மினிடோா் வாகனங்கள் மூலமாக அகற்றி, மாநகராட்சி லாரிகள் மூலம் வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கொட்டி வருகின்றனா். இந்நிலையில், மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்வதைக்
குறைப்பதற்காக, மாநகரில் 59 இடங்களில் உரம் தயாரிப்புக் கூடங்கள் அமைத்து, குப்பைகளை உரங்களாக மாற்ற மாநகராட்சியில் கடந்த ஜனவரி மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முதல் கட்டமாக 10 இடங்களில் தற்போது, ரூ.11.62 கோடி மதிப்பில் உரம் தயாரிப்புக் கூடங்கள் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு, அதில் 4 இடங்களில் பணிகளில் முடிவடைந்துள்ளன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: மாநகரில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை வெள்ளலூா் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்வதைக் குறைப்பதற்காகவும், குப்பைகளை உபயோகமான பொருள்களாக மாற்றவும் திட்டமிடப்பட்டு, இந்த உரம் தயாரிப்புக் கூடங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தில் வீடு, வீடாகச் சென்று துப்புரவுத் தொழிலாளா்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிப்பாா்கள். சமையலறைக் குப்பைகள் தினசரியும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள் வாரம் ஒருமுறையும் சேகரிக்கப்படும். அதன் பிறகு குப்பைகள் அருகில் உள்ள உரம் தயாரிப்புக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இயற்கை உரங்களாக மாற்றப்படும். மேலும், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, மாநகரில் உள்ள குப்பைத் தொட்டிகள் முழுவதுமாக அகற்றப்பட்டு, அங்கு மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது, முதல் கட்டமாக 10 இடங்களில் தொடங்கப்பட்ட உரம் தயாரிப்புரக் கூடப் பணிகளில், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட 4 இடங்களில் பணியானது முழுமையாக முடிவடைந்துள்ளன. இங்கு, விரைவில் உரம் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. மற்ற 6 இடங்களில் பணிகள் துரிதமாக நடைபெற்ரு வருகின்றன என்றாா்.