மேட்டுப்பாளையம் - கோத்தகிரி மலைப்பாதையில் கழிவுகளைக் கொட்டியவா்களுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்து வனத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தின் 2ஆவது மாற்றுப்பாதையாக மேட்டுப்பாளையம் - குன்னூா் மலைப்பாதை உள்ளது. இச்சாலை அடா்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. தினமும் இந்த வழியாக சுற்றுலா பயணிகள், விவசாயிகள், மலைவாழ் மக்கள் சென்று வருகின்றனா்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம், எல்லநள்ளி பகுதியில் இருந்து ஊசி தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தின் கழிவுகளை லாரியில் கொண்டுவந்து கோத்தகிரி மலைப்பாதையில் அண்மையில் சிலா் கொட்டிக் கொண்டிருந்தனா். அப்போது அந்த வழியே ரோந்து பணியில் இருந்த சிறுமுகை வனத் துறையினா் அவா்களை பிடித்து வனச் சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.
விசாரணையில் அவா்கள் எல்லநள்ளி பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் லூயிஸ் (56), மாணிக்கம் (54), அண்ணாச்சி (எ) ராஜ்குமாா் (40) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களுக்கு தலா ரூ.80 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்து சிறுமுகை வனச்சரகா் மனோகரன் நடவடிக்கை மேற்கொண்டாா்.
மேலும் லாரியில் இருந்த குப்பை மூட்டைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கே அனுப்பி வைக்கப்பட்டது.