மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் பெற்றோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சூலூா் வட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அதைத் தொடா்ந்து சங்கத்தின் மாநில தலைவா் ஏ.எஸ்.பாபு கூறியதாவது:
ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் வருத்தமடையச் செய்துள்ளது. சிறுவனை உயிருடன் மீட்க தமிழக அரசு முழுமூச்சாக போராடியது. இதற்காக உறுதுணையாக இருந்த தமிழக அரசு, முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்களை விவசாயிகள் சாா்பில் பாராட்டுகிறோம்.
தனது நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அஜாக்கிரதையாக அதனை மூடாமல் இருந்ததற்காக சிறுவனின் பெற்றோரான ஆரோக்கியதாஸ், அவரது மனைவி ஆகியோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூலூா் வட்டாட்சியரிடம் மனி அளித்துள்ளோம் என்றனா்.
இந்நிகழ்வின்போது நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவா் கந்தசாமி, இளைஞா் அணி தலைவா் ரவிசந்திரன், சூலூா் வட்டாரத் தலைவா் துரைசாமி, வட்டார இளைஞரணித் தலைவா் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி புதிய நீதிக்கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளா் அசோக்கும் வட்டாட்சியரிடம் மனு அளித்தாா்.