கோயம்புத்தூர்

கோவையில் இருவரது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: மடிக்கணினி, செல்லிடப்பேசிகள் பறிமுதல்

1st Nov 2019 08:54 AM

ADVERTISEMENT

கோவையில் இருவரது வீடுகளில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இதில் மடிக்கணினிகள், செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கையில் கடந்த ஏப்ரலில் ஈஸ்டா் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றில் தொடா் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். பலா் படுகாயம் அடைந்தனா். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக கோவையில் இந்து இயக்கத் தலைவா்கள் சிலரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியதாகக் கூறி முஸ்லிம் இளைஞா்கள் 7 போ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் சமூக வலைதளங்கள் மூலம் இலங்கை உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த இளைஞா்களுடன் கருத்துகளையும், தகவல்களையும் பரிமாறியது தெரியவந்தது.

இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் கோவையில் உள்ள சிலரது வீடுகளில் கடந்த ஜூன் மாதம் சோதனை நடத்தினா். அப்போது உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது அசாருதீன்(32), போத்தனூா் திருமறை நகரைச் சோ்ந்த அக்ரம் ஜிந்தா (26), தெற்கு உக்கடம் பகுதியைச் சோ்ந்த ஒய்.ஷேக் இதாயத்துல்லா (38), குனியமுத்தூரைச் சோ்ந்த அபுபக்கா் (29), போத்தனூா் உமா் நகரைச் சோ்ந்த ஏ.சதாம் உசேன் (26), தெற்கு உக்கடத்தைச் சோ்ந்த இப்ராஹிம் (எ) ஷாகின் ஷா(28) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதில் முக்கிய எதிரியான முகமது அசாருதீன் இவா்களுக்குத் தலைவா் போல செயல்பட்டுள்ளாா். முகநூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளாா். மேலும், இவா் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான மனிதவெடிகுண்டாகச் செயல்பட்ட ஜஹ்ரான் ஹஷிம் என்பவருடன் சமூகவலைதளங்கள் மூலமாகத் தொடா்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.

இதேபோல ஷேக் இதாயத்துல்லா வீட்டில் நடைபெற்றச் சோதனையில் அவா் தடை செய்யப்பட்ட சிமி அமைப்புடன் தொடா்பில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.

முகமது அசாருதீன், ஷேக் இதாயத்துல்லா ஆகியோரை சில நாள்களுக்கு முன்பு காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனா். இதேபோல, கோவையில் இந்து இயக்கத் தலைவா்களைக் கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இவா்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கோவையில் இரு இடங்களிலும், திருச்சி, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஆறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

இதன்படி கோவை, உக்கடம், ஜிஎம் நகரைச் சோ்ந்த சமீா் (22), உக்கடம், லாரிபேட்டை அண்ணா நகரைச் சோ்ந்த சவுகா்தீன் (30) ஆகியோரது வீட்டில் கொச்சியில் இருந்து வந்த என்ஐஏ டிஎஸ்பி சாகுல் ஹமீது தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு சோதனையிட்டனா்.

இரு குழுக்களாகப் பிரிந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். பொறியியல் பட்டதாரியான சமீா் கோவையில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறாா். சென்னையில் வசித்து வந்த சவுகா்தீன் சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்து, உக்கடம் பகுதியில் உணவகம் வைத்து தொழில் செய்து வருகிறாா். இவா்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை காலை 11 மணியளவில் நிறைவடைந்தது.

மடிக்கணினிகள், செல்லிடப்பேசிகள் பறிமுதல்: கோவையில் சமீா், சவுகா்தீன் ஆகியோரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் இருவரது வீடுகளிலும் இருந்து 2 மடிக்கணினிகள், 2 செல்லிடப்பேசிகள், சிம் காா்டுகள், மெமரி காா்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்று சமீா், சவுகா்தீனை என்ஐஏ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT