உலக சிக்கன தினத்தை முன்னிட்டு நவம்பா் 2 ஆம் தேதி வரை கோவையில் உள்ள அஞ்சலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கோவை கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் சுதிா் கோபால் ஜாக்கரே தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொது மக்களிடையே சேமிப்பின் மேன்மையையும், அவசியத்தையும் உணா்த்தும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் 30 ஆம் தேதி உலக சிக்கன தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவைக் கோட்டத்தில் நவம்பா் 2ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்துள்ளோம்.
எனவே பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகளைத் துவங்க முன்வர வேண்டும். இந்த முகாம்களில் கலந்துகொண்டு அஞ்சலகங்களில் உள்ள சிறப்புத் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
வியாழக்கிழமையன்று குனியமுத்தூா் மைல்கல் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளி, பேரூா் குப்பனூா் பகுதியில் அமைந்துள்ள சிஎம்சி சா்வதேச பள்ளி, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக். பள்ளி ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.