சூலூர் இடைத்தேர்தலில் 22 பேர் போட்டி

சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர். 
வருகின்ற மே 19 ஆம் தேதி நடைபெற உள்ள சூலூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிட 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், வேட்பு மனு பரிசீலனையின்போது 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 22 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட  நிலையில்,  யாரும் வாபஸ் பெறவில்லை. அதனால் 22 பேர் போட்டியிடுவது  வியாழக்கிழமை உறுதியானது. 
தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.பாலகிருஷ்ணன், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் இறுதிவேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். 
இதில் அதிமுக வேட்பாளர் பி. கந்தசாமி, திமுக வேட்பாளர் நா.பொங்கலூர் பழனிசாமி, அமமுக வேட்பாளர் கே.சுகுமார், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜி.மயில்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.வி.விஜயராகவன், உழைப்பாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.சண்முகம், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த எம்.சந்தோஷ்  ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதேபோல் சுயேச்சைகளாக வி.கணேசன், எல்.கதிரேசன், பி.என்.கந்தசாமி, பி.கந்தசாமி, பி.கார்த்திகேயன், ஏ.நூர்முகமது, கே.பழனிசாமி, கே.பாலமுருகன், ஆர்.ஈஸ்வரமூர்த்தி, டி.உமர் அலி, டி.பிரபாகரன், வி.புஷ்பானந்தம், வி.முருகன், பி.ரமேஷ்குமார், எஸ்.டி.ராஜாவேலுசாமி போட்டியிடுகின்றனர்.
2 மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு 
ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் நோட்டா ஆகியவற்றுக்கு மட்டுமே இடம் இருக்கும். சூலூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் 22 பேர் போட்டியிடுவதால் அங்குள்ள வாக்குச் சாவடிகளில் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "சூலூர் இடைத் தேர்தலில் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம்,  யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்து கொள்ளும் இயந்திரம் ஒன்று பயன்படுத்தப்பட உள்ளன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com