மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தின் முன்பு கோவை அரசு மருத்துவமனை டீன் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை ஆஜராகினர்.
கோவை அரசு மருத்துவமனையில் முடநீக்கியல் பிரிவு மருத்துவராக 2008 முதல் 2018ஆம் ஆண்டு வரை மருத்துவர் கஜேந்திரன் பணியாற்றி வந்தார். இவரை 2018 ஜனவரி 3ஆம் தேதி, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி அரசு மருத்துவமனை டீன் அசோகன் உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து கஜேந்திரன் விளக்கம் கேட்டபோது, டீன் அசோகன் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கஜேந்திரன் அனுமதி பெற்று விடுப்பில் சென்றுள்ளார். ஆனால், அவர் பணிக்கு வரவில்லை எனக் கூறி கஜேந்திரனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு கஜேந்திரன் அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது எனக்கூறிய அசோகன், இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆணையத்தில் புகார் அளித்து அவரை இடமாறுதல் செய்தார்.
இதையடுத்து உதகை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட கஜேந்திரன் அங்கிருந்து தற்போது சூலூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னை அவதூறாகப் பேசியதோடு, பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட டீன் அசோகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனித உரிமை ஆணையத்தில் கஜேந்திரன் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி துரைஜெய்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். இவர்கள் முன்னிலையில் டீன் அசோகன், உள்தங்கும் மருத்துவ அலுவலர் ஆர்.சௌந்திரவேல், துறை இயக்குநர் வெற்றிவேல் செல்வன், ஓய்வுபெற்ற நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் ஆஜராகினர். இவர்களிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து இதன் மீதான விசாரணை ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த டீன் அசோகன் கூறுகையில், "கஜேந்திரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் துறை ரீதியான நடவடிக்கைகள்தான். விசாரணை நடைபெற்று வருவதால் இதுகுறித்து மேலும் கூற விரும்பவில்லை' என்றார்.