பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 9 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
குருடம்பாளைம் ஊராட்சியில் நடந்த கூட்டத்துக்கு, ஒன்றிய அலுவலர் தங்கமணி தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற பொதுமக்கள், ஊராட்சியில் போதுமான அளவுக்கு குடிநீர் இருந்தும், அதனை குடிநீர் ஆப்ரேட்டர்கள் சரியான முறையில் விநியோகிப்பதில்லை. குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை என புகார் கூறினர். இதற்கு பதிலளித்து பேசிய ஊராட்சி செயலர் (பொறுப்பு) கோபி, உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று இப்பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்றார். பன்னிமடையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற விவேகானந்தா நற்பணி மன்ற நிர்வாகிகள் பொதுமக்கள் முறையாக வரி கட்டியும் குடிநீர் விநியோகத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறது என புகார் தெரிவித்தனர்.
சின்னத்தடாகம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு சமூகநலத் துறை பிரிவு அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற பல்வேறு கட்சி நிர்வாகிகள் கடந்த கிராம சபைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளே இன்னும் செயல்வடிவம் பெறவில்லை. ஆதலால் முதலில் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் நடந்த கூட்டத்துக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷாராணி தலைமை வகித்தார். இதில் பட்டீஸ்வரர் நகர், வி.எம்.டி நகரில் சாலைகளை உடனடியாக செப்பனிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் 24.வீரபாண்டி, நாயக்கன்பாளையம்,பிளிச்சி,அசோகபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.