கடந்த மூன்றரை மாதங்களாக டாப்சிலிப் பகுதியில் மரக்கூண்டில் சிறை வைக்கப்பட்டிருந்த சின்னத்தம்பி யானை வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டுள்ளது.
கோவை, தடாகம் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானை டாப்சிலிப்-வரகளியாறு வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. ஒரு சில நாள்கள் மட்டுமே வரகளியாறு பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி அதற்கு பிறகு வனப் பகுதியில் கிழக்கு திசையில் இடம் பெயரத்தொடங்கியது. இதைத் தொடர்ந்து, வனப் பகுதியை விட்டு வெளியேறிய யானை உடுமலை பகுதியை பிப்ரவரி 1ஆம் தேதி அடைந்தது. தொடர்ந்து மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள விவசாயத்தோட்டத்தில் தஞ்சமடைந்த யானையின் நடவடிக்கைகளை வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அந்த இடத்தில் கும்கி யானைகள் கலீம், மாரியப்பன் ஆகியவை கொண்டுசெல்லப்பட்டு கண்காணிக்கப்பட்டது. வனத் துறையின் கண்காணிப்பில் இருந்த யானையைப் பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, பிப்ரவரி 16 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தப்பட்டு கும்கி யானைகள் உதவியுடன் சின்னத்தம்பி பிடிக்கப்பட்டு வரகளியாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு மரக்கூண்டில் சிறைவைக்கப்பட்டது.
கடந்த மூன்றரை மாதங்களாக பாகன்கள் மூலம் சின்னத்தம்பி யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இயற்கையாகவே சாதுவான குணம் கொண்ட சின்னத்தம்பி யானை பாகன்களிடம் எளிதில் பழகியது. மேலும், பாகன்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்தது. சின்னத்தம்பி யானைக்குப் பிடித்தமான கரும்பு மற்றும் பல்வேறு உணவுகள் வழங்கியதாக வனத் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சின்னத்தம்பி யானையை சிறைவைக்கப்பட்ட மரக்கூண்டிலிருந்து வனத் துறையினர்
வெள்ளிக்கிழமை விடுவித்தனர். சின்னத்தம்பி யானையின் கால்களில் சங்கிலி கட்டப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து முகாம் யானைகளுடன் சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும் வனத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
ரகசியமாக கூண்டில் இருந்து வெளியேற்றம்...: சின்னத்தம்பி யானையை மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து யாருக்கும் தெரியாமல் கூண்டில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.