கோயம்புத்தூர்

கோவை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைபாதைகள் அமைக்க கோரிக்கை 

29th Jun 2019 07:44 AM

ADVERTISEMENT

கோவை ரயில் நிலையத்துக்கு வருகின்ற ரயில்கள், சிரமமின்றி குறிப்பிட்ட நேரத்துக்கு வந்தடைய கூடுதலாக நடைபாதைகள் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கோவை ரயில் நிலையத்தில் 6 நடைபாதைகள் உள்ளன. இந்த நடைபாதைகளின் வழியாக தினமும் 73 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 5 நடைபாதைகளில் அவ்வப்போது ரயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், பெரும்பாலும் ஈரோடு, திருப்பூரில்  ரயில் நிலையங்களில் இருந்து கேரளம், மங்களூரு செல்லும் ரயில்கள்  முதல் மற்றும் 2-ஆவது நடைபாதை வழியாக இயக்கப்படுகின்றன. இதில், தாமதமாக வருகின்ற ரயில்கள், கூடுதல் பெட்டிகள் இணைப்புக்காக காத்திருக்கும் ரயில்கள் அடிக்கடி  நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் புறப்படும் வரை, வெளியூர்களில் இருந்து கோவை வரும் ரயில்கள் வடகோவை ரயில் நிலையத்தைக் கடந்து காட்டூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதேபோல், போத்தனூர் ரயில் நிலையம் வழியாக கோவை ரயில்நிலையம் வந்தடையும் ரயில்கள்  வாலாங்குளம் அருகே நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் வீடு மற்றும் பணியிடங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதைத் தவிர்க்க கோவை ரயில் நிலையத்தில் கூடுதலாக தண்டவாளங்கள் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

ADVERTISEMENT
ADVERTISEMENT