கோவை மாநகருக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டச் செயலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இதில், கோவை மாநகர மக்களுக்கு சீராக குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும், சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், நிலத்தடி நீரை அதிகரிக்க குளம், குட்டைகளைத் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, என்.ஜெயபாலன், வி.பெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.