வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை (ஜூன் 26) வெளியிடப்பட்டது. பட்டியலில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 11 பட்டப் படிப்புகளில் உள்ள 3,905 இடங்களுக்கு, 2019-20 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு 51,876 மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.
 அவர்களில் 41,590 பேர் உரிய கட்டணம் செலுத்தி, போதிய விவரங்களை சமர்ப்பித்திருந்தனர். இவர்களில் 18,030 பேர் ஆண்கள், 23,560 பேர் பெண்கள். பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்களைக் கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை பட்டியல் வெளியிடப்பட்டது. துணைவேந்தர் நீ.குமார் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். இதன்படி, கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூரைச் சேர்ந்த மாணவி எம்.எஸ்.ரேவதி 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் கேரள மாநிலம், மலப்புரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 இரண்டாவது இடத்தை புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த ஆர்.சிவாலினி பிடித்துள்ளார். இவர் 198.25 கட்- ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தை தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்த மாணவர் எம்.ஆலன் பிடித்துள்ளார். இவர் 198.25 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதேபோல், நாகப்பட்டினம் பி.ஸ்ரீபிரீதிகா, தருமபுரி கே.கோவர்தன், விழுப்புரம் எம்.அமரன், வேலூர் என்.எஸ்.வினோதினி, கடலூர் பி.சாய் பூஜா, ஈரோடு வி.கீர்த்தி, வேலூர் இ.ஐஸ்வர்யா ஆகியோர் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்.
 தரவரிசைப் பட்டியலில் 200 முதல் 193.50 மதிப்பெண்கள் வரை 100 பேரும், 193.50 முதல் 192 வரை 100 பேரும் பெற்றுள்ளனர். 190 மதிப்பெண்களுக்கு மேல் சுமார் ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 15,404 பேர் இடம் பெற்றுள்ளனர். மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 10,871 பேரும், எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த 8,451 பேரும், ஓ.சி. பிரிவில் 4,256 பேரும், எஸ்.சி. அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த 1,241 பேரும், பி.சி. முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 901 பேரும், எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 466 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
 இவர்களில் 36,614 பேர் பொது ஒதுக்கீட்டு பிரிவில் போட்டியிடுகின்றனர். 1,630 பேர் தொழிற்கல்வி பிரிவிலும், 242 பேர் முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டிலும், 285 பேர் விளையாட்டு ஒதுக்கீட்டிலும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 92 பேரும் போட்டியிடுகின்றனர். 
இதைத் தொடர்ந்து துணைவேந்தர் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், வேளாண்மைப் படிப்புகளை முடிப்பவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் இருப்பதால், இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 32,621 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த ஆண்டு 41,590 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
 கடந்த ஆண்டு படிப்பை முடித்தவர்களில் 150 மாணவ-மாணவிகளுக்கு வங்கிகளில் வேலை கிடைத்துள்ளது. தோட்டக்கலைத் துறையில் சுமார் 100 பேருக்கும், தனியார் நிறுவனங்களில் 72 பேருக்கும் வேலை கிடைத்துள்ளது. இதைத் தவிர வெளிநாடுகளிலும் பல்வேறு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இளம் தொழில்நுட்பப் படிப்புகளில் (பி.டெக்.) உயிர்த் தகவலியல், வேளாண்மை தகவல் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளை தற்காலத்துக்கு ஏற்ப வடிவமைப்பதற்காக அவற்றில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
 மேலும், வேளாண் படிப்புகளில் சேரும் மாணவர்கள், பின்னர் அதிலிருந்து விலகி மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட வேறு படிப்புகளில் சேரும் நிலையில், இந்த ஆண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிந்த பிறகே நாங்கள் கலந்தாய்வைத் தொடங்க இருக்கிறோம். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். 4 அல்லது 5 கட்டங்களில் ஆன்லைன் கலந்தாய்வை நடத்தி மாணவர்களைச் சேர்க்க இருக்கிறோம். ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் கல்லூரிகள் திறக்க வாய்ப்பு உள்ளது.
 தமிழகத்தில் மழை பற்றாக்குறையாலும், காவிரி நீர் இல்லாததாலும் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அதேநேரம், காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கீடு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், விவசாயிகள் குறைந்த அளவிலான நீரைப் பயன்படுத்தி மாற்றுப் பயிர்களை பயிரிடுவதற்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் போதிய அறிவுரை வழங்கியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com