நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரிப்பு : சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டத்தை  மாதந்தோறும் நடத்த கோரிக்கை

கோவையில் வாகன விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாதந்தோறும் சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

கோவையில் வாகன விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாதந்தோறும் சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
தமிழகத்தின் பல இடங்களில் மது போதையில் வாகனங்களை இயக்குவது,  ஒரு வழிப்பாதையில் செல்வது, ஆபத்தான பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்காதது, வேகத்தடைகளில் வண்ணம் பூசாதது, சாலைகளில் எச்சரிக்கை சமிக்ஞை விளக்குகள் அமைக்காதது உள்ளிட்ட காரணங்களால் விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனைத் தவிர்க்கவும், போக்குவரத்து தொடர்பான  விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய அரதின் நிதியுதவியுடன், மாநில அரசு கடந்த 2000 ஆம் ஆண்டு சாலைப் பாதுகாப்புக் குழுவை ஏற்படுத்தியது. அதில் மாநில அளவிலான குழுவுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைவராகவும், காவல் துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி நிர்வாகம், பொது சுகாதாரம், ஊரக நகரமைப்பு இயக்ககம், தன்னார்வ நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் உறுப்பினர்களாகவும்  நியமிக்கப்பட்டனர். 
மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், காவல் துறை ஆணையர், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர், உள்ளாட்சி அமைப்பு ஆணையர், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர், மருத்துவத் துறையினர் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் உறுப்பினர்களாகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஒவ்வோர் மாதமும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால், சாலைப் பாதுகாப்புக் குழு கூடி, விபத்துகளைத் தவிர்க்க பல்வேறு முடிவுகள் எடுக்க வேண்டும். 
ஆனால், கோவையில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து மாதந்தோறும் சாலைப் பாதுகாப்புக் குழு கூட்டப்படவில்லை. 2017 ஆம் ஆண்டில் 3 கூட்டங்களும், 2018-ஆம் ஆண்டில்  ஒரு கூட்டமும் மட்டுமே நடந்துள்ளதாகவும் புகார்  எழுந்துள்ளது.   இதுகுறித்து  கோவை கன்ஸ்யூமர் செயலர் நா.லோகு கூறியதாவது: 
கோவையில் 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலை பாதுகாப்புக் குழுவில் விபத்தைத் தடுக்க எவ்வித முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காந்திபுரம் நஞ்சப்பா சாலை, பெரியகடை வீதி, சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.தனியார் பேருந்துகள் மிக வேகமாக இயக்கப்பட்டு, விபத்து ஏற்படுத்துவதும் தவிர்க்க முடியாமல் உள்ளது. இதைத் தடுக்க விபத்து ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளிகன் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தல், அபராதத் தொகையை அதிகரித்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 1999 ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து தொடர்பான  கருத்துக் கேட்பு கூட்டம், அப்போதைய மாநகரக் காவல்துறை ஆணையரால் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பெறப்பட்ட ஆலோசனைகளின் படி கோவையில் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. அதேபோல், தற்போதும், கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். கோவை சாலைப் பாதுகாப்புக் குழுவில், இதர அரசுத்துறை மற்றும் பொது நலன் சார்ந்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரித்து குழுவைத் திருத்தியமைக்க வேண்டும் என்றார். 
இதுதொடர்பாக போக்குவரத்துக் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 2018  டிசம்பர் 13 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கூட்டம் நடத்தப்படவில்லை. தேர்தல் முடிந்த பிறகு மே 31ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அடுத்த கூட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com