அடுத்த 2 ஆண்டுகளில் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்: கல்லூரிகளின்  கூட்டமைப்பு தலைவர்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அடுத்த 2 ஆண்டுகளில்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அடுத்த 2 ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் கூறியுள்ளார்.
பொறியியல் படிப்புகளில் சேர உள்ள மாணவ-மாணவிகள் ஆன்லைன் கலந்தாய்வை எப்படி அணுகுவது என்பது குறித்தும், பொறியியல் படிப்புகளைப் பயிலுவதால் என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது தொடர்பாகவும் ஒரு நாள் கருத்தரங்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நாஸ்காம் மண்டலத் தலைவர் உதயசங்கர், ஐ.சி.டி. அகாதெமியின் செயல் துணைத் தலைவர் பி.அன்புத்தம்பி, கே7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி புருஷோத்தமன், அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
 பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் தலைவர் எஸ்.மலர்விழி, பி.பி.ஜி. கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு உள்ளிட்டோர் கெளரவ விருந்தினர்களாகப் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், ஏராளமான மாணவ-மாணவிகள் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
 இதைத் தொடர்ந்து கூட்டமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது பொறியியல் படித்தவர்களுக்கே அதிக அளவிலான வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. சர்வதேச அளவிலும் பொறியியல் படித்தவர்களுக்கே வேலைவாய்ப்பு அதிகம் கிடைத்து வருகிறது.
 பொறியியல் படித்தால் வேலை இல்லை என்று தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதால், கடந்த சில ஆண்டுகளாக கலை, அறிவியல் கல்லூரிகளில் அதிக மாணவ-மாணவிகள் சேருகின்றனர். கலை, அறிவியலில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையே ஊதியம் கிடைக்கும். ஆனால், பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு முதல் ஊதியமே ரூ.30 ஆயிரமும் முதல் கிடைக்கும். 10 ஆண்டுகளில் அவர்களது ஊதியம் ரூ.1 லட்சத்தைத் தாண்டிவிடும். அடுத்த 2 ஆண்டுகளில் பொறியியல் பயிலும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com