கோயம்புத்தூர்

மார்ட்டின் நிறுவன ஊழியர் பழனிசாமி நீரில் மூழ்கி இறக்கவில்லை: மறுபிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

31st Jul 2019 08:30 AM

ADVERTISEMENT

கோவை தொழிலதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமி நீரில் மூழ்கி இறக்கவில்லை என மறுபிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தொழிலதிபர் மார்ட்டின் அலுவலகத்தில் காசாளராகப் பணியாற்றி வந்தவர் கோவை, உருமாண்டம்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி. கடந்த மே மாதம் நடைபெற்ற வருமானவரிச் சோதனையின்போது பழனிசாமியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், திடீரென மாயமான பழனிசாமி காரமடை பகுதியில் உள்ள குளத்தில் இறந்து கிடந்தார்.
 இதையடுத்து, தனது தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், எனவே மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமியின் மகன் ரோகின்குமார் மனு தாக்கல் செய்தார். 
 இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நீதித் துறை நடுவர் ஒருவரை நியமிக்குமாறு கோவை தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் எஸ்.நாகராஜனுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, பழனிசாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோவை மாவட்ட நீதித் துறை நடுவர் (எண் 8) எம்.ராமதாஸ் நியமிக்கப்பட்டார். 
 அதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதித் துறை நடுவர் எம்.ராமதாஸ், பழனிசாமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மீது அதிருப்தி தெரிவித்தார். மேலும், பழனிசாமியின் உடலை ஏற்கெனவே பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு அல்லாமல் இரண்டுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொண்ட புதிய குழுவினரை அமைத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யுமாறு கோவை மருத்துவக் கல்லூரி டீனுக்கு உத்தரவிட்டார். 
 இந்த புதிய மருத்துவர்கள் குழுவில், மனுதாரர் (ரோகின்குமார்) தரப்பில் பரிசீலிக்கப்பட்டுள்ள மருத்துவரான பி.சம்பத்குமார் என்பவரையும் சேர்க்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
 அதன்படி பழனிசாமியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை மே 28ஆம் தேதி நடைபெற்றது. பழனிசாமி குடும்பத் தரப்பு மருத்துவராக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் சம்பத்குமார், அரசுத் தரப்பில் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் கோகுல்ராம், கன்னியாகுமரி அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் மறு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் பழனிசாமியின் உடல், அவரது மனைவி, மகன்களிடம் ஜூன் 12ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது.
 இந்நிலையில்  மருத்துவர் சம்பத் குமார் தனது அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து, கோவை மாவட்ட நீதித்துறை நடுவர்(எண்.8) எம்.ராமதாஸ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். இதுகுறித்து மருத்துவர் சம்பத் குமார் கூறியதாவது:
 பழனிசாமி நீரில் மூழ்கி இறந்தாரா, இல்லையா என்பதைக் கண்டறியும் பரிசோதனை (க்ண்ஹற்ர்ம் ற்ங்ள்ற்) மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் தானாகவே நீரில் மூழ்கி இறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொலை தான் செய்யப்பட்டாரா என்பது போலீஸாரின் இறுதி விசாரணைக்குப் பின்னர் தான் தெரியவரும் என்றார்.
 பழனிசாமி குடும்பத்தினர் தரப்பு வழக்குரைஞர் கூறுகையில், எங்கள் தரப்பு மருத்துவர் மேற்கொண்ட மறுபிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளோம். அதில் பழனிசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. 
மற்ற இரு மருத்துவர்களின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். அவர்களது அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் 
என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT