கோயம்புத்தூர்

மின் மீட்டர்கள் பொருத்துவதில் விதி மீறல்: நுகர்வோர் அமைப்பு புகார்

30th Jul 2019 08:28 AM

ADVERTISEMENT

கோவையில் மின்சார வாரியத்தின் சார்பில் மின் அளவீடு மீட்டர்களை பொருத்துவதில் விதி மீறல்கள் நடைபெறுவதாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
 இது தொடர்பாக மின்வாரியத்துக்கு அந்த அமைப்பின் செயலர் நா.லோகு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் மழை நீர் வெளியே செல்ல முடியாத இடத்தில் மின்சார மீட்டர் அமைக்கப்பட்டிருந்ததால், அங்கு வெள்ளம் சூழ்ந்தபோது மின்கசிவு ஏற்பட்டு பெரும் விபத்து நேரிட்டது.
 இதையடுத்து புதிய இணைப்பு, இடமாற்றம் போன்றவை செய்யும்போது மின்சார மீட்டர்களை கட்டடத்தின் தரையில் இருந்து 3 அடி உயரம் முதல் 5 அடி உயரம் வரை அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் கோவையில் எந்த ஒரு இடத்திலும் இந்த உத்தரவு சரியாக பின்பற்றப்படுவதில்லை. தெக்கலூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் மின்சார மீட்டரே சுமார் 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதைப் போல பல வணிக வளாகங்களில் 10-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளுக்கான மீட்டர் பெட்டிகள் ஒரே இடத்தில், நிலமட்டத்தை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன.
 இதுபோன்ற இடங்களில் மின்வாரிய ஊழியர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள் கணக்கெடுப்பதிலும் பல சிரமங்கள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு மின்சார வாரிய விதிமுறைகளை சரிவர கடைப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் 
வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT