சர்வதேச அளவில் புலிகள் பாதுகாப்பை வலியுறுத்தி 24 நாடுகளில் விழிப்புணர்வு மேற்கொள்ளும் வாகன பிரசார பயணம் கோவையில் திங்கள்கிழமை தொடங்கியது.
சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, கோவையைச் சேர்ந்த புலிகள் பாதுகாப்பு அமைப்பான டபிள்யூ.டி.எஃப். சார்பில் கேரள மாநிலம், பரம்பிக்குளம் முதல் பிரான்ஸ் நாடு வரையிலான வாகன விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு திட்டமிடப்பட்டது.
இந்த அமைப்பின் நிறுவனர் கெளதம், நிர்வாகி பால் ஜார்ஜ் ஆகியோர் 24 நாடுகள் வழியாக 65 நாள்கள் சுமார் 25 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். அதன்படி, இவர்களது பிரசார பயணம் பரம்பிக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இருப்பினும் பயணத்தின் முறைப்படியான தொடக்க விழா கோவை, சின்னவேடம்பட்டியில் உள்ள சி.எம்.எஸ். அறிவியல், வணிகவியல் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது.
கல்லூரியின் தலைவர் எம்.பி.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஏற்கெனவே கார் மூலம் லண்டன் வரை பயணம் செய்தவரும், தொழிலதிபருமான மீனாட்சி அரவிந்த் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பயணத்தை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.