கோயம்புத்தூர்

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

30th Jul 2019 08:22 AM

ADVERTISEMENT

கல்வி உரிமையை மாநில அரசிடம் இருந்து பறிக்கும் வகையில் அமைந்திருக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் ஒரு கோடி கையெழுத்து பெறுவதற்கான இயக்கம் நடைபெற்று வருகிறது. 
இக்கட்சியின் பல்வேறு பிரிவுகள் சார்பில் கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாகப் பெறப்பட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகள் அடங்கிய படிவங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி கோவை, காந்திபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இதில், கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்ட பல்வேறு நிர்வாகிகள், அதற்கான படிவங்களை ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கினர். கட்சியின் மாவட்டச் செயலர் ராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ராதிகா, முன்னாள் எம்.எல்.ஏ. வெள்ளிங்கிரி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறியது:
புதிய கல்விக் கொள்கையானது மாநில அரசின் பட்டியலில் இருக்கும் கல்வி அதிகாரங்களை மத்திய அரசு பறித்துக் கொள்ளும் விதமாக உள்ளது. சுயநிதிக் கல்லூரிகள் தங்களுக்கான கல்விக் கட்டணத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ள முடியும் என்ற விதியால், கல்விக் கட்டணம் அதிகரித்து, ஏழை மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் நிலை உருவாகும். மாநில உரிமையைப் பறிக்கும் விதத்தில் இருப்பதால் இந்த கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.
 கோவையில் குடிநீர் விநியோக உரிமை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, "வெள்ளையனே வெளியேறு இயக்கம்' நடைபெற்ற ஆகஸ்ட் 9-ஆம் தேதி கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திட்டமிட்டுள்ளது என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT