ஆறு மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தைப் பெற்றுத்தரக்கோரி கோவை பிஎஸ்என்எல் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் த.ராமதுரை முருகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ் உள்பட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.
இதில் பட்டா மாற்றம், உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தனி நபர்கள், விவசாய சங்கங்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.
நிலுவை சம்பளம் வழங்க வேண்டும்: பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் வினோத் அளித்துள்ள மனு:
கோவை மாவட்ட பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 442 பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் எங்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் நிறுவனத்தின் மீது புகார் தெரிவிக்கின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் கேட்டபோது, முறையான பதில் அளிக்கவில்லை. 6 மாத சம்பளம் நிலுவையில் உள்ளதால் வீட்டு வாடகை, குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் உள்ளிட்டவை செலுத்த முடியமால் தவிக்கிறோம். எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்த ஊழியர்களின் நிலுவை சம்பளத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய வேண்டும்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோவை கிழக்கு மாநகர செயலாளர் ஆர்.எஸ்.தனபால் அளித்துள்ள மனுவில், கோவை மாநகராட்சியில் அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்பட அனைத்துப் முக்கிய சாலைகளிலும் பெரும்பாலான பேருந்து நிறுத்தங்கள் போக்குவரத்து சிக்னல் அருகே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விபத்துக்கும் வழி வகுக்கிறது. எனவே போக்குவரத்து சிக்னல் அருகே அமைந்துள்ள பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்காநல்லூர், சுங்கம், சுந்தராபுரம், ஈச்சனாரி, அரசு மருத்துவமனை, சரவணம்பட்டி, கணபதி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை கடக்க நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும். நெருக்கடியான பகுதிகளில் காலை, மாலை முக்கிய நேரங்களில் போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
மனை அங்கீகார சான்றிதழ் வழங்க வேண்டும்: மதிமுக 1ஆவது பகுதி செயலாளர் எஸ்.பி.வெள்ளியங்கிரி அளித்துள்ள மனுவில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மனை வரன்முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ், கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு, மனை வரன்முறைக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. மனை வரன்முறைக்காக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை வங்கி மூலம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் மனைவரன்முறை செய்ததற்கான அங்கீகாரச் சான்றிதழ் ஓராண்டாகியும் மனுதாரர்களுக்கு இதுவரையில் வழங்கப்படவில்லை. எனவே கோவை மாநகராட்சியில் மனை வரன்முறைக்காக பணம் செலுத்திய அனைத்து காலி மனைதாரர்களுக்கும் அங்கீகாரச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் வேண்டும்: கோவை மாவட்டம், காரமடை பேரூராட்சி, எம்.ஜி.ஆர். நகரில் ஆபத்தான நிலையில், பள்ளத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித்தரக்கோரி பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உறுப்பினர்கள் மாதர் சங்கத்துடன் இணைந்து மனு அளித்தனர்.
இருசக்கர வாகனங்களை வாடகைக்குப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தனியார் நிறுவன ஓட்டுநர்களும், கோவை பிரசன்டேஷன் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் மனு அளித்தனர். பணி வரன்முறைப் படுத்த வேண்டும், விடுமுறை அளித்தல் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.