விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை, சிங்காநல்லூர் குளத்தில் சிலைகள் கரைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
சிங்காநல்லூர் குளம் தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூழல் பாதுகாப்பிலும் முன்னிலையில் இருக்கிறது. இதை மாநகராட்சி நிர்வாகத்தினரும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் பாதுகாத்து வருகின்றனர். குளத்தின் தூய்மையை கருதி இங்கு விநாயகர் சதுர்த்தி விழாவுக்குப் பிறகு சிலைகள் கரைப்பதற்கு கடந்த ஆண்டு அக்டோபரில் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இக்குளத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க வேண்டும் என மாநகர போலீஸாருக்கும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மாநகர போலீஸார், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் சிங்காநல்லூர் குளத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிலைகள் கொண்டு வரப்படும். எனவே குளத்தின் ஒரு பகுதியை மட்டும் சிலைகளைக் கரைக்க பயன்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.
இதுகுறித்து தன்னார்வ தொண்டு அமைப்பினர் கூறுகையில், பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக சிங்காநல்லூர் குளம் அறிவிக்கப்பட்டதையடுத்து இங்கு கரையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இங்கு பறவை வருகை அதிகரித்துள்ளது. அதேபோல கடந்த சில மாதங்களாக அரிய வகை ஆமைகளும் அதிகளவில் காணப்படுகிறது.
சமீபத்தில் இங்கு நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், இங்கு 328 மருத்துவப் பயனுள்ள தாவரங்கள், 144 மர வகைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இங்கு மீண்டும் சிலை கரைப்புக்கு அனுமதி அளித்தால் பல்லுயிர் சூழல் பாதிக்கும் என்றனர்.