உப்பு சர்க்கரை கரைசல் (ors) தினத்தை முன்னிட்டு கோவை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாடகம், பாடல்கள் மூலம் செவிலியர் பயிற்சி மாணவிகள் திங்கள்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, வாந்தியால் உடலில் நீர்சத்து அளவு குறைந்து உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. இதனால் கடும் வயிற்றுப்போக்கின் போது உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது. இது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கி ஆபத்தில் இருந்து பாதுகாக்கிறது.
இக்கரைசல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் தேதி உப்பு சர்க்கரை கரைசல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை டீன் அசோகன் தொடங்கி வைத்து பேசினார்.
இதில் செவிலியர் பயிற்சி மாணவிகள் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நாடகம், பாடல்கள் மூலம் பொதுமக்கள், நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தெருவோரக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை தவிர்த்தல், உணவு உட்கொள்ளும் முன் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் இருப்பிட மருத்துவ அலுவலர் ஆர்.செளந்திரவேல், குழந்தைகள் நல மருத்துவப் பிரிவு தலைவலர் வி.பூமா, மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.