டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக டெங்கு பாதிப்பும் பரவலாக ஏற்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஒருவார காலத்தில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கோவையைச் சேர்ந்த 2 பேர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுவன் லோகேஷ் டெங்கு காய்ச்சலுக்கு அண்மையில் உயிரிழந்த நிலையில் டெங்கு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவமனை டீன் அசோகன் தெரிவித்துள்ளார்.