கோயம்புத்தூர்

சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை

27th Jul 2019 06:47 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் செயலாளராக கனகராஜ்  2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர். 
இதையடுத்து கனகராஜ்,  ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு 2017ஆம் ஆண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இவர் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. 
இதன்பேரில் அப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் நடத்திய சோதனையில் கனகராஜ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்குகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 
இந்நிலையில்,  லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்  சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை சோதனை செய்தனர். இதில்  2011-17 ஆம் ஆண்டு வரையிலான குடிநீர் வரி, வீட்டு வரி, புதிய குடியிருப்புகளுக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர்  ஊராட்சி அலுவலகத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் கோப்புகளை எடுத்துச் சென்றனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT