கோயம்புத்தூர்

பயிற்சியில் காயமடைந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு

22nd Jul 2019 10:02 AM

ADVERTISEMENT

கோவையில் பயிற்சியின்போது தடுக்கி விழுந்து காயமடைந்த  சிஆர்பிஎப் வீரர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கோவை, துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) பயிற்சிக் கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு ஹவில்தார் முதல் ஆய்வாளர்கள் வரையிலானோருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்தப் பயிற்சிக் கல்லூரியில் உதவி ஆய்வாளர் பயிற்சிக்காக 270 பேர் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் பங்கஜ் (25) என்பவரும் தங்கி பயிற்சி பெற்று வந்தார்.
பி.டெக் பட்டப்படிப்பு படித்துள்ள பங்கஜ், ஜூலை 6 ஆம் தேதி, 4 அடி உயரம் கொண்ட 3 சுவர்களை தடை தாண்டிச் செல்லும் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, சுவரைத் தாண்டும்போது, எதிர்பாராதவிதமாக கால் தவறி பங்கஜ் கீழே விழுந்துள்ளார்.
இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பங்கஜ் சனிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்கு பிறகு பங்கஜின் உடல், சி.ஆர்.பி.எப். கல்லூரிக்கு கொண்டுச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், அவரது உடல் கோவையில் இருந்து விமானம் மூலம் தில்லிக்கு கொண்டுச் செல்லப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT