கோவை மாநகரில் சோடியம் விளக்குகளை அகற்றி விட்டு, எல்.இ.டி. தெருவிளக்குகள் பொருத்தும் திட்டத்தின் கீழ் தற்போது வரை 4 ஆயிரம் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வார்டுகளில் 68 ஆயிரம் தெரு விளக்குகள் உள்ளன. இதில் 45 ஆயிரத்துக்கும் அதிகமாக சோடியம் விளக்குகள் உள்ளன. இவற்றுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மின்கட்டணம் மாநகராட்சி மூலமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த செலவை தவிர்க்கும் பொருட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் கழிவுநீர்ப் பண்ணையில் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்
அளவுக்கு சூரிய ஒளித் தகடுகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மாநகரில் உள்ள சோடியம் விளக்குகளை அகற்றிவிட்டு, எல்இடி விளக்குகள் பொருத்த மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, எல்இடி விளக்குகளை மாநகராட்சி அதிகாரிகள் சில இடங்களில் பரிசோதனைக்காகப் பொருத்தி கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பரிசோதனைப் பணிகள் முடிவடைந்து கடந்த மாதம்முதல் முக்கியச் சாலைகளில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில், தெருவிளக்குகள் சரிவர எரியாமல் உள்ள நகர்ப்புறச் சாலைகளில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.