கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வெள்ளி விழா

16th Jul 2019 09:31 AM

ADVERTISEMENT

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க வெள்ளி விழா ஜூலை 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க வெள்ளி விழா நிகழ்ச்சி ஜூலை 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, முதன்மை நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணா, கல்லூரி முதல்வர் அலமேலு, முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சாந்தினி ஆகியோர் கலந்து கொண்டு இலச்சினையை வெளியிட்டனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பல்வேறு வெளிநாடுகளிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொழில்முனைவோர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் உள்ளனர். இவர்கள் தற்போதைய பாடக் குழுவில் இடம் பெற்று ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். முன்னாள் மாணவர்கள் நினைவு நிதி மூலம் பல்வேறு மாணவர்களுக்கு உதவி அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் மாணவர் மன்றத்தின் 25 ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கையைக் காப்போம் என்ற கோஷத்துடன் குறு மாரத்தான் ஓட்டத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன.
மேலும், விழாவில் சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழா, விருது வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. அத்துடன் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்களும் கெளரவிக்கப்பட உள்ளனர். இந்த 3 நாள் நிகழ்வுகளிலும் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT