கோயம்புத்தூர்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி: தம்பதியர் கைது

16th Jul 2019 09:35 AM

ADVERTISEMENT

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10க்கும் மேற்பட்டோரிடம் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்த தம்பதியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கோவை, இடையர்பாளையம், அன்பு நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ். பொறியியல் படிப்பு முடித்து வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில், தனது நண்பர் ஒருவர் மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆள்கள் அனுப்பும் ஸ்ரீவசந்தி எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வரும் கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்த வசந்தி (38), அவரது கணவர் சந்தோஷ் ஆகியோரது தொடர்பு சந்தோஷுக்கு கிடைத்துள்ளது. சந்தோஷின் படிப்புக்கு ஏற்ற வேலை ஆஸ்திரேலியா நாட்டில் உள்ளதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய சந்தோஷும் பணத்தைக் கொடுத்துள்ளார்.
பின்னர் இந்தோனேஷியா சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் எனவும், இதற்கு கூடுதலாக ரூ.3 லட்சம் செலவாகும் எனவும் வசந்தி, சந்தோஷ் தம்பதி தெரிவித்துள்ளனர். இதை நம்பிய சந்தோஷும் கூடுதலாக ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்தோனேஷியா சென்ற அவர் உரிய வேலைக்கான நுழைவு இசைவுச் சீட்டு கிடைக்காத காரணத்தால் அங்கிருந்து திரும்பி இந்தியா வந்துள்ளார். இதனால், கோபமடைந்த சந்தோஷ் வசந்தி மற்றும் அவரது கணவரிடம் தன்னுடைய பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் பணத்தைத் திரும்பத் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த சந்தோஷ் அவர்கள் குறித்து விசாரித்தபோது, தம்பதியர்கள் இருவரும் இதேபோல 10க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை பணம் பெற்று ரூ.40 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம், சந்தோஷ் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் கோவை கணபதியில் வசித்து வரும் வசந்தி, சந்தோஷ் தம்பதியை திங்கள்கிழமை கைது செய்தனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT