கோயம்புத்தூர்

முக்கிய இடங்களில் இரவு நேரத்தில் துப்புரவுப் பணி: மாநகராட்சி புதிய முயற்சி

16th Jul 2019 09:33 AM

ADVERTISEMENT

போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள முக்கிய இடங்களில் இரவு நேரத்தில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் புதிய முயற்சியை கோவை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு துப்புரவு, குடிநீர் விநியோகம் உள்பட அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
மாநகராட்சியில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் நாள்தோறும் வேலை உள்பட பல்வேறு காரணங்களுக்காக லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இதில் காந்திபுரம், டவுன்ஹால், பூமார்க்கெட், உக்கடம், சாய்பாபா காலனி, சிங்காநல்லூர், அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.
இதனால் துப்புரவுப் பணிகள் மேற்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து நெருக்கடி, மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும் இடங்களில் இரவு நேரத்தில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் முயற்சியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
இதனால் எந்தவித இடையூறும் இல்லாமல் எளிதாக துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள முடிவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார் கூறியதாவது:
பூமார்க்கெட், காந்திபுரம், உக்கடம் போன்ற முக்கிய இடங்களில் காலை நேரத்தில் துப்புரவுப் பணி மேற்கொள்வது மிகவும் சிரமமாக இருந்து வருகிறது. இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பே இரவு நேரத்தில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டன. தற்போது, மீண்டும் இரவு நேரத்தில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமையில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக இருப்பதால் வாரம்தோறும் சனிக்கிழமை இரவில் துப்புரவுப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இரவு நேர துப்புரவுப் பணிக்கு விருப்பமுள்ள பணியாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர். இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது. இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நெருக்கடியும் இல்லாததால் துப்புரவுப் பணிகளை எளிதாகவும், விரைவாகவும் மேற்கொள்ள முடிகிறது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT